வியாழன், 28 மே, 2009
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ள வாக்கெடுப்பு முடிவு [வெள்ளிக்கிழமை, 29 மே 2009, 07:12 மு.ப ஈழம்] [பி.கெளரி] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் முடிவு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது என்று 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'த பைனான்சியல் ரைம்ஸ்' நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததை தொடர்ந்து மேற்குலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்யமுடியாத நிலையை அடைந்துள்ளது. சிறிலங்காவில் முற்றுப்பெற்ற போர் பாரிய மனித உரிமை மீறல்களுடன் நிறைவுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா, ரஸ்யா, இந்தியா உட்பட 26 நாடுகள் சிறிலங்கா அரசின் பிரேரணையை ஆதரித்திருந்தன.
சிறிலங்கா அரசு தனது பிரேரணையில் உள்நாட்டு விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதை எதிர்த்ததுடன், விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.
ஆனால், அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படாதது, மனித உரிமை சபைக்கு ஒரு பின்னடைவாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டவியல் பணிப்பாளர் ஜூலீற்றா டி றைவிரோ தெரிவித்துள்ளார்.
கனடா, மெக்சிக்கோ, சிலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலேயே சபையின் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள உள்ளனர்.
உதவி நிறுவனங்களின் பணிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கப்படுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சிறிலங்காவில் நடைபெற்ற மோதல்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
இறுதி வாரம் நடைபெற்ற சமரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். மக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுத்ததுடன், எறிகணைத் தாக்குதல்களை மக்களின் மீது சிறிலங்கா அரசு நடத்தியிருந்தது.
மக்கள் காணமால் போவது, துன்புறுத்தப்படுவது, நிதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்படுவது போன்ற தகவல்கள் தற்போதும் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வருடகால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளது. இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக